இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வளர்ச்சியை மேலும்மேலும் உயர்த்தும் நோக்கில் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது.
தவிர, அது சமீபத்தில் அறிமுகப்படுத்திய புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டன. ஆம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. சீனாவில் உருவாக்கப்பட்ட மலிவு விலை செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக், அமெரிக்காவின் சாட்ஜிபிடியை உலக அளவில் பதிவிறக்கத்தில் விஞ்சியது. எனினும், டீப்சீக்கில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானதாக இல்லை என வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியல், தங்கள் எல்லைகளுக்குள் டீப்சீக்கைப் பயன்படுத்துவதை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடை செய்துள்ளது.
அதில், அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளன. DeepSeek AI-ஐ தடை செய்த உலகின் முதல் நாடாக இத்தாலி மாறியது , கடந்த மாத தொடக்கத்தில் இதைச் செய்தது. ஐரோப்பிய நாட்டில் உள்ள ஆப் ஸ்டோர்களில் இருந்து சீன AI தளம் நீக்கப்பட்டது. இத்தாலியின் தனியுரிமை கண்காணிப்பு அமைப்பான இத்தாலிய தரவு பாதுகாப்பு ஆணையம் (DPA), பயனர் தரவை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்த தகவல்களை வழங்குமாறு ஸ்டார்ட்அப்பைக் கேட்டதை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், தைவான் தனது தனியார் குடிமக்கள் சீன AI சாட்போட்டைப் பயன்படுத்துவதை இன்னும் தடை செய்யவில்லை என்றாலும், அதன் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் டீப்சீக் AI பயன்பாட்டை நாடு தடை செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதிக அளவில் பதிவிறக்கம் நடைபெற்ற டீப்சீக் செயலி, சாட்ஜிபிடி போன்றவற்றை மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் அலுவக கணினிகளில் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. அரசு தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக, இந்தியாவில், நிதி அமைச்சகம் அதன் ஊழியர்கள் டீப்சீக்கைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல அரசு நிறுவனங்களுடன் இணைந்து அவ்வாறு செய்துள்ளது.
இந்த நிலையில், சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக்கை அரசு அதிகாரிகள் பயன்படுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் க்வா ஜியாகுன், ”சட்டத்துக்கு எதிராக தகவல்களைச் சேகரித்து வைக்குமாறு எந்த ஒரு நிறுவனத்தையோ, தனி நபரையோ சீன அரசு கேட்டுக் கொண்டதில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது வா்த்தகத்தை அரசியலாக்கும் செயலாகும். இந்த விவகாரத்தில் சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஓபன் ஏஐ நிறுவனம் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. கூகுள், மைக்ரோசாஃப்ட் பிங் போன்ற தேடுதல் வலைதளங்களை போன்று சாட்ஜிபிடி டாட் காம் என்ற தளம் வழியாக தேடுதலை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தை பயன்படுத்த பயனாளர்கள் கணக்கு ஏதும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஓபன் ஏஐ நிறுவனம் கூறியுள்ளது. இந்த மாற்றங்கள் மேம்படுத்தப்பட்ட ஜிபிடி-4ஓ என்ற அப்டேட் வெர்சனில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான சீனாவின் டீப்சீக் ஏஐ, சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்ற ஏஐ செயலிகளை பின்னுக்கு தள்ளிய நிலையில், இந்த மாற்றத்தை ஓபன் ஏஐ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.