ai, india x page
உலகம்

AI துறையில் தனியார் முதலீடு.. 10வது இடத்துக்குள் நுழைந்த இந்தியா! 2ம் இடத்தில் சீனா!

ஏஐ தொழில்நுட்பமே எதிர்காலத்தில் உலகை வழிநடத்தும் என கருதப்படும் நிலையில், அதுசார்ந்த தனியார் துறையில் அதிக முதலீடுகள் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10ஆவது இடம் பிடித்துள்ளது.

Prakash J

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இது, பலவிதமான தொழில் நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. மேலும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இதன்மூலம் பொறியாளர்களும் தயாரித்து வருகின்றனர். இது, சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது உலகின் பல்வேறு நாடுகளும் போட்டிபோட்டு களத்தில் குதித்து வருகின்றன.

AI

இந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பமே எதிர்காலத்தில் உலகை வழிநடத்தும் என கருதப்படும் நிலையில், அதுசார்ந்த தனியார் துறையில் அதிக முதலீடுகள் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10ஆவது இடம் பிடித்துள்ளது. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐநா அமைப்பு, இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஏஐ-யில் முதலீடு செய்வதில் 67 பில்லியன் டாலர் முதலீட்டுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும், இது உலகளாவிய முதலீடுகளில் 70% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 பில்லியன் டாலர் முதலீட்டுடன் சீனா 2ஆம் இடத்திலும் 1.4 பில்லியன் டாலர் முதலீட்டுடன் இந்தியா 10ஆவது இடத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் முதல் 10 இடங்களில் சீனாவும் இந்தியாவும் மட்டுமே உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

2033 ஆம் ஆண்டுக்குள் AI சந்தை மதிப்பில் 4.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய சக்தியாக மாறும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், AI உலகளவில் 40 சதவீத வேலைகளை பாதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.