முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேற்று இரவு பதவியேற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதன் எதிரொலியாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் அலுவலகம், அதிபர் மாளிகை, அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில் அரசு சொத்துகள் கடும் சேதமடைந்த நிலையில், பிரதமர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுடன், முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கினர். போராட்டக் குழுவினர் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்தது. இந்நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகாரத்தைக் கையில் எடுத்த ராணுவம், அமைதியை மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தது.
இதற்கிடையில், காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் நேபாளத்தின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு உத்தரவுகளை அதிகாரிகள் நீக்கினர். இதனால் அன்றாட வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நீண்டகால முடக்கத்திற்குப் பிறகு தெருக்களில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சமீபத்திய வன்முறை போராட்டங்களின்போது சேதப்படுத்தப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட முக்கிய அரசு கட்டடங்கள் உட்பட பல இடங்களில் அதிகாரிகள் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளனர் என PTI தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நேபாளத்தில் ஒருபுறம் வன்முறை முடிவுக்கு வந்து அமைதி திரும்பியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் ஆன்லைன் மூலம் கலந்துரையாடல் நடத்தி முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை நாட்டின் இடைக்காலப் பிரதமராக நியமிக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நேற்று இரவு பதவியேற்றார். அவருக்கு அதிபர் ராம்சந்திர பவுடல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், `இந்த இடைக்கால அரசு நேபாளத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்தும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துப் பதிவில், “நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சுஷிலா கார்க்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதியாக உறுதிபூண்டுள்ளது" என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டு விவசாயக் குடும்பம் ஒன்றில் ஏழு குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்த சுஷிலா கார்க்கி, கிழக்கு நேபாளத்தில் வளர்ந்தார். 1959ஆம் ஆண்டு நேபாளத்தின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவுடன் அவரது குடும்பம் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தது. கார்க்கி 1972ஆம் ஆண்டு மகேந்திர மோராங் வளாகத்தில் தனது இளங்கலை பட்டத்தையும், அதைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1978ஆம் ஆண்டு, காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1985ஆம் ஆண்டு தரனில் உள்ள மகேந்திரா மல்டிபிள் கேம்பஸில் உதவி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அதேநேரத்தில், 1979 முதல் பிரத்நகரில் சட்டப் பயிற்சியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2009ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, அவர் நிரந்தர நீதிபதியானார். மேலும் ஜூலை 2016இல், அவர் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்தார். தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், தகவல் மற்றும் தொடர்பு அமைச்சர் ஜெய பிரகாஷ் பிரசாத் குப்தாவிற்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கினார். 2016ஆம் ஆண்டு நேபாள உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெயரெடுத்த அவர், அப்போதைய அரசுடன் கடுமையான மோதலையும் சந்தித்தார். தவிர, அவரைப் பதவி நீக்கம் செய்ய தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இதனால், அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆயினும் கார்க்கி பதவிநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அரசியல் ஊழலால் விரக்தியடைந்தார். அவரது குறிப்பிடத்தக்க தீர்ப்பு, அரசமைப்பு சார்ந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பின் தலைவராக லோக்மான் சிங் கார்க்கியின் நியமனத்தை ரத்து செய்தது. மாணவப் பருவத்தில், ஜனநாயகத்துக்காகப் போராடிய நேபாள காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய கார்க்கி, தனது ஆசிரியரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான துர்கா சுபேதியைத் திருமணம் செய்துகொண்டார். துர்கா சுபேதி, 1973ஆம் ஆண்டு ஜூன் மாதம் நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய நான்கு பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.