உலகம்

மீண்டும் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்த இந்தியா திட்டம்: பாகிஸ்தான் அமைச்சர் அச்சம்

JustinDurai

இந்தியா மீண்டும் பாகிஸ்தான் மீது 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்த திட்டமிட்டுள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'. கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இரவு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரியில் முகாமிட்டிருந்த டோக்ரா படைப்பிரிவினருக்கு மறக்க இயலாத நாளாக மாறிவிட்டது. அப்பகுதியில் திடீரென ஊடுருவிய பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தாக்குத‌லின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுப்பிரிவு இருந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

அடுத்த சில நாட்களில், அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 29ஆம் தேதி அதிகாலை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த இந்திய ராணுவ சிறப்புப் படை வீரர்‌கள் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தினர். நள்ளிரவில் தொடங்கிய தாக்குதல் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியதாக இந்திய ‌ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து முதலில் மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், பின்பு ஒருவழியாக சமாளித்து இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த பயத்தில் பாகிஸ்தான் இன்னும் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முஹ்மூத் குரேஷி, இந்தியா மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரபு நாடுகள் மத்தியில் கதறியுள்ளார்.

குரேஷி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ``எங்கள் உளவுத்துறை திரட்டிய ஆதாரங்கள் மூலம் நான் தெரிந்துகொண்டது, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவலை சேகரித்துள்ளனர். இது ஒரு தீவிரமான விஷயம்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே இந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயணம் செய்திருந்தார். இந்தப் பயணத்தை தொடர்ந்து தற்போது குரேஷி ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது குரேஷி வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார். அவரிடம் காஷ்மீர் குறித்தும் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் இந்தியாவுக்கு எதிரியாக குற்றச்சாட்டுகளை குரேஷி சுமத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியாகியுள்ளது.