ஐக்கிய நாடுகள் சபையில் (UN) இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா பாகிஸ்தான் அரசை 'படிவம் 47 அரசு' (Form 47 Government) என விமர்சித்துள்ளது. இதையடுத்து, அந்த வார்த்தை பேசுபொருளாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) இந்தியா மீது குற்றச்சாட்டை வைத்த பாகிஸ்தானுக்கு, அப்போதே இந்திய அதிகாரிகள் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானில் உள்ள 'சிவில் அரசாங்கங்கள்' என்று அழைக்கப்படுபவை, உண்மையில் அந்நாட்டு ராணுவத்தின் தயவில்தான் இயங்குகின்றன என்று இந்தியா சாடியது. மேலும், பொருளாதாரம் மற்றும் உள்நாட்டுக் அதிருப்திகளைத் தீர்க்க முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. தனது சொந்த நாட்டின் குறைகளைச் சரிசெய்வதிலும் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என இந்தியா பதிலடி கொடுத்தது. இதைச் சுட்டிக்காட்டவே ’படிவம் 47 அரசு’ என்ற வார்த்தையையும் இந்தியா ஐ.நாவில் பயன்படுத்தியது. இதையடுத்து,’படிவம் 47 அரசு’வார்த்தை பேசுபொருளாகி உள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் விதிகளின்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் 'படிவம் 45'-ல் பதிவு செய்யப்படும். அதன்பிறகு, தொகுதி தேர்தல் அதிகாரி அனைத்து வாக்குச்சாவடிகளின் முடிவுகளையும் ஒன்றிணைத்து தற்காலிகத் தேர்தல் முடிவாக வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணமே 'படிவம் 47' ஆகும்.
2024 பாகிஸ்தான் பொதுத்தேர்தலின்போது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் (தற்போது சிறையில் உள்ளார்) கட்சி ஆதரவு வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை 'படிவம் 45' காட்டியதாகவும், ஆனால் ராணுவத்தின் தலையீட்டால் 'படிவம் 47'-ல் முடிவுகள் மாற்றப்பட்டு ஷெபாஸ் ஷெரீப்பின் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால், ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல; 'படிவம் 47' மூலம் போலியாக உருவாக்கப்பட்ட அரசு என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்தே, பாகிஸ்தான் அரசுக்கு மக்களிடம் உண்மையான ஜனநாயக அங்கீகாரம் இல்லை என்றும், அது அந்நாட்டு ராணுவத்தின் தயவில் இயங்கி வருகிறது என்றும் உலக அரங்கில் சுட்டிக்காட்டுவதற்காக இந்தியா இந்த வார்த்தையைப் பயன்படுத்தியது. இதன்மூலம், 2024 பாகிஸ்தான் தேர்தல்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த சர்ச்சையையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.