இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த இப்தார் விருந்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் அடாவடித்தனமாக நடந்துகொண்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் இந்திய தூதரகம் சார்பில் ரமலான் இப்தார் விருந்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் விருந்து நடந்த ஓட்டலை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் முற்றுகையிட்டு அங்கிருந்த விருந்தினர்களை அவமரியாதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களில் நூற்றுக்கணக்கானோரை திரும்ப அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்து நடைபெறுவதற்கு முன், தொலைபேசியில் அழைத்து விருந்தில் பங்கேற்க கூடாது என விருந்தினர்களை மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் அடாவடி செயலுக்கு இந்திய தூதரகம் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தூதரக நடத்தைகளுக்கான அடிப்படை விதிகளை பாகிஸ்தான் மீறி இருப்பதாக இந்திய தூதர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார்.
மேலும் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட விருந்தினர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் இது போன்ற செயல்கள் ஆழ்ந்த வருத்தத்தினை ஏற்படுத்தி இருப்பதாக அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார்.