உலகம்

ஜெருசலேம் பிரச்னையில் வாய் திறக்காத இந்திய அரசு: இஸ்ரேலுடன் நெருக்கமா?

ஜெருசலேம் பிரச்னையில் வாய் திறக்காத இந்திய அரசு: இஸ்ரேலுடன் நெருக்கமா?

webteam

பாலஸ்தீன விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்படும் போதெல்லாம், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பாலஸ்தீனம் என்றொரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியா, அதே நேரத்தில் இஸ்ரேலையும் நட்புப் பட்டியலிலேயே வைத்திருக்கிறது.

மதத்தின் அடிப்படையில் நாடுகள் உருவாக்கப்படக்கூடாது என்ற கொள்கையை தொடக்கத்தில் இருந்தே கடைப்பிடித்துவரும் நாடு இந்தியா. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடு உருவாக்கப்படுவதை தேசத் தந்தை மகாத்மா காந்தியும், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் கடுமையாக எதிர்த்தனர்.

1947-ல் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து வாக்களித்த மிகச்சில நாடுகளுள் ஒன்று இந்தியா. 1950-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தாலும், நேரு தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்திராகாந்தி பிரதமரான காலத்தில் இருந்துதான் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவதற்கான விதைகள் தூவப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்களின்போது பல்வேறு வகையான உதவிகளை இஸ்ரேல் இந்தியாவுக்குச் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 1992-ம் ஆண்டு இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுடன் முழுமையான உறவை ஏற்படுத்திக் கொண்டது. 1997-ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பாத வெகுசில நாடுகளுள் இஸ்ரேலும் ஒன்று. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே தலைவர்கள் பரஸ்பரம் பயணம் மேற்கொள்வது வழக்கமாகிவி்ட்டது. 2003-ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் இந்தியாவுக்கு வந்தார்.

இஸ்ரேலுக்கும் இந்தியாதான் மிகப்பெரிய சந்தை. பாகிஸ்தானும் சீனாவும் நெருங்குவதால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கவே இஸ்ரேலுடன் நெருங்குவதாக இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. ஏவுகணைகள், படை விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா வாங்கி வருவதுடன், கூட்டுப் போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியாவும் இஸ்ரேலும் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருக்கின்றன.

சமகாலத்தில் மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியிலும் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டிருக்கிறது இந்தியா. வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நே மெனசே பழங்குடிகள் யூத வம்சாவளியினராகக் கருதப்படுகின்றனர். யூத இன அழிப்பில் சற்றும் பாதிக்கப்படாத மக்கள் இவர்கள்தான் என்பதாலும் இஸ்ரேலுக்கு இந்தியா மீது சாதாரணமாகவே நட்பு உண்டு. இதனால், இஸ்ரேலைப் பொருத்தவரை, மிக நெருக்கமான நட்பு நாடு இந்தியாதான்.