india - pakistan ani
உலகம்

உயிர்நாடியில் கைவைத்துவிட்டது இந்தியா! உலக நாடுகளிடம் புலம்பும் பாகிஸ்தான்!

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீரை முற்றிலுமாக நிறுத்துவதாகக் கூறி, 1960ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது.

PT WEB

இந்தியா-பாகிஸ்தான் உறவு மீண்டும் தீவிர பதட்டத்தில் உள்ளது. 2025 பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்த இந்தியா, பயங்கரவாத ஆதரவை நிறுத்தாத பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை மறுத்து, 1960 ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் வறட்சி, விவசாய நெருக்கடி தீவிரமடைந்து, உயிர்நாடி துண்டிக்கப்பட்டதாக இஷாக் தார் உலக அரங்கில் புலம்புகிறார்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததில் இருந்தே, இரு நாடுகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான். இந்தியப் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பதில் தாக்குதல் நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டது.

india - pakistan

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான முக்கிய எல்லை பகுதியான லாட்டரி வாகா எளல்லையும் மூடப்பட்டது. இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் எப்போது ஆதரவாகச் செயல்படுவதை நிறுத்திக்கொள்கிறதோ, அதுவரை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் சிந்து நதி நீரை முற்றிலுமாக நிறுத்துவதாகக் கூறி, 1960ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானின் ஜீவநதியாகப் பாய்ந்து கொண்டிருந்த சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதால், பாகிஸ்தானில் வறட்சி நிலவி, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிந்து நதி நீரைத் திறந்துவிடுமாறு பாகிஸ்தான் கோரிக்கை வைத்தும், அதைச் செயல்படுத்த இந்தியா மறுத்துவிட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பேசும்போது, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியிருப்பது சட்டபூர்வமற்றது என்றும், இந்தியா பாகிஸ்தானின் 25 கோடி மக்களின் உயிர்நாடியில் கைவைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். விவசாயம், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி உற்பத்தி, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை சிந்து நதி அமைப்பின் நீரை ஆழமாகச் சார்ந்துள்ளன.

sindhu river

எனவே, பாகிஸ்தானுக்கான நீர்ப் பாதுகாப்பு என்பது பொருளாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் இறுதியாக தேசியப் பாதுகாப்பிலிருந்து பிரிக்க முடியாதது. நீர்ப் பாதுகாப்பு பாகிஸ்தானின் தேசிய நிலைத்தன்மையோடு நேரடியாகத் தொடர்புடையது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிடமும் இந்த விவகாரத்தில் ஆதரவு கோரி, பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், “ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் அமலுக்கு வராது” என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர