மோடி - டிரம்ப் PTI
உலகம்

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்த ஒப்பந்தம்.. 18 சதவீதமாக வரி குறைப்பு.. டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Premkumar S

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை மீட்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியிடையே தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியுடன் பேசியது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தியாவின், சக்திவாய்ந்த மற்றும் மதிப்புக்குரிய தலைவர்களில் ஒருவராக மோடி உள்ளார். அவருடனான பேச்சுவார்த்தையில், பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்திவிட்டு, வெனிசுலாவிருந்து அதிக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியின் வேண்டுகோளின் பேரில், உடனடியாக அமல்ப்படுத்தும் வகையில் இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியா மீதான வரிவிதிப்பு 25% சதவீதத்திலிருந்து 18% சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, இந்தியா மீதான வரியை குறைத்ததற்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த அற்புதமான அறிவிப்புக்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக ட்ரம்ப்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி

மேலும் இரு பெரிய பொருளாதாரங்களும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது, மக்களுக்கு பெரிதும் நன்மை அளிக்கும் என்றும் உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமை முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயும் கடந்த சில காலங்களாக முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.