அதிபராகப் பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். முன்னதாக, இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்து. இந்த வரிவிதிப்பு, ஜூலை 8-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதையடுத்து, செப்டம்பா்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அவர், “இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இந்தியா அதிக வரிவிதிப்பை விரும்பவில்லை. இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிகவும் எளிதான விஷயமாகவே உள்ளது. ஏனெனில், இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.