உலகம்

இந்தியா- சீன பிரச்னையால் உலகத்துக்கே பாதிப்பு

இந்தியா- சீன பிரச்னையால் உலகத்துக்கே பாதிப்பு

webteam

இந்தியா - சீனா எல்லை பிரச்னை நீடித்தால் அது மற்ற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார். 

சீனாவும், இந்தியாவும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள் என்பதோடு பொருளாதார ரீதியில் வலிமையானவை என்றும் புரூஸ் ரீடல் என்ற அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா வந்த போது சீனா மேற்கொண்ட ஊடுருவலை அதன் உள்நோக்கம் கொண்ட நகர்வாகவே பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா - சீனா பிரச்னை நீடிக்கும் நிலையில் இதில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தூதரக ரீதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், டோக்லாம் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இருநாட்டுப் படைகளையும் ஓரே நேரத்தில் திரும்பப் பெறலாம் என்ற இந்தியாவின் யோசனையை சீனா நிராகரித்துள்ளது.

டோக்லாம் பகுதியில், தங்களுக்கு சொந்தமான பகுதியிலேயே சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் சீனா கூறியுள்ளது. பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக துணை இயக்குநர் வாங் வெனில், ராணுவத்தை திரும்பப்பெறும் இந்தியாவின் யோசனையைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

இந்திய பத்திரிகையாளர்களும் பங்கேற்றிருந்த இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாங் வெனில், நேபாள எல்லையில் உள்ள கலாபானி பகுதியிலோ, பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீருக்குள்ளோ சீன ராணுவம் புகுந்தால், இந்தியா ஏற்குமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் சீன வெளியுறவுத்துறை அதிகாரி வாங் வெனில் தெரிவித்துள்ளார். சீனாவின் இந்த கருத்தால், இருநாடுகளுக்கு இடையேயான மோதல் வலுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.