அமெரிக்கா தொடங்கியுள்ள வர்த்தகப்போரால் இந்தியாவுக்கு பலன்களே அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. எப்படி என்பதை பார்க்கலாம் .
இப்போது... ஆயுதப்போர்கள் மெல்ல முடிவுக்கு வந்து வர்த்தகப்போர்கள் உலகெங்கும் பேசுபொருளாகியுள்ளன. கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாட்டு பொருட்களுக்கு சொன்னபடியே வரி விதிப்பை அதிகரித்துவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதனால் இம்மூன்று நாடுகளில் இருந்து வரும் பொருட்களின் விலை அமெரிக்காவில் கடுமையாக உயர உள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படும் என சர்வதேச வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, விவசாய விளைபொருட்கள், விவசாய இயந்திரங்கள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் என அவர்கள் கணித்துள்ளனர். மேலும் சீனா, கனடாவின் பல பொருட்களுக்கு அமெரிக்காவின் கதவு மூடப்படும் நிலை வந்துவிட்டதால், அப்பொருட்களை இந்தியா போன்ற நாடுகள் குறைந்த விலையில் வாங்க முடியும் என GTRI அமைப்பு கூறியுள்ளது. இந்த வகையில் கனடாவிலிருந்து கச்சா எண்ணெய், உரங்கள், தாமிரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை இந்தியா குறைந்த விலையில் வாங்க இயலும் இன்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தங்கள் பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்காவிட்டால் பதிலுக்கு தாங்களும் இந்திய பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அப்படி இந்தியாவுக்கு அமெரிக்கா வரியை அதிகரித்தாலும் அது சீனா, மெக்சிகோ, கனடா மற்றும் பிற ஆசிய நாடுகளை போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் மிக கவனமான காய் நகர்த்தல்களின் மூலம் தற்போதைய சர்வதேச வர்த்தகப்போரால் இந்தியா மிகப்பெரிய பலன் பெற முடியும் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. புதிய தலைமுறைக்காக சேஷகிரி