ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும், இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு கடுமையான நடவடிக்கையாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் இந்தியா தடை செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானிலிருந்து கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அல்லது கொண்டு செல்வது, சுதந்திரமாக இறக்குமதி செய்யக்கூடியதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லது வேறுவிதமாக அனுமதிக்கப்பட்டாலும், மறு உத்தரவு வரும் வரை உடனடியாக தடை செய்யப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையின் நலனுக்காக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு விதிவிலக்கு அளிக்க இந்திய அரசின் முன் ஒப்புதல் தேவை" எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரே வர்த்தகப் பாதையான வாகா-அட்டாரி பாதை உள்ளது. இது, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள், பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் முதன்மையாக இருந்தன. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பல ஆண்டுகளில் இது குறைந்துள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் பொருட்களுக்கு 200% வரி விதித்தது. 2024-25ஆம் ஆண்டில் மொத்த இறக்குமதியில் இது 0.0001 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.