கருங்கடல் Pt web
உலகம்

ஹார்முஸை தொடர்ந்து கருங்கடல்.. மாலுமிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!!

கருங்கடல் (Black Sea) மற்றும் அதனை ஒட்டிய கடல்சார் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கும் வர்த்தகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Premkumar S

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கருங்கடல் பகுதிகளில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தசூழலில் தான், கருங்கடல் (Black Sea) மற்றும் அதனை ஒட்டிய கடல்சார் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கும் வர்த்தகக் கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர்

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2026 ஏப்ரல் மாதம் முதல் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. எனவே, கருங்கடல் பகுதியில் இயங்கும் கப்பல்களில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், காப்பீட்டு வசதிகள், அவசரகால நடைமுறைகள் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும், குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்திய அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கருங்கடலில் ரஷ்யா - உக்ரைன் எல்லைப் பகுதியில் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்றின் மீது கடந்த ஜூலை 18-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 5-வது இந்திய மாலுமி உயிரிழந்தார். இந்தநிலையில் தான், மத்திய அரசிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, ஈரான் அமெரிக்கா மோதலைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட பாதுகாப்புப் பதற்றம் காரணமாக, அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை புதிதாக பணியமர்த்துவதைத் தவிர்க்குமாறு கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.