காசாவில் போர் நிறுத்தத்துக்கான ஐக்கிய நாடுகள் பொது அவை வாக்கெடுப்பில் வாக்களிக்க மறுத்திருப்பதன் மூலம் இந்த விவகாரத்தில் ஆறு மாதத்துக்கு முந்தைய நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக்கொண்டுள்ளது.
ஐநா பொது அவையில் கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் வகையிலான நான்கு தீர்மானங்களில் மூன்றில் இந்தியா வாக்களிக்கவில்லை. 2024 டிசம்பர் 13 அன்று காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தில் மட்டுமே இந்தியா ஆதரித்து வாக்களித்தது.
வியாழக்கிழமை அன்று ஸ்பெயின் கொண்டுவந்த போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தில் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா உள்பட 19 நாடுகள் வாக்களிக்க மறுத்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
55,000 பேர் கொல்லப்பட்ட காசா நெருக்கடி குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டிருந்தாலும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதல்களைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்ததாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பரவதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.