உலகம்

டோக்லாம் பிரச்னை: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

webteam

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக நிலுவையில் இருக்கும் தீர்மானத்திற்கு இரு தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 

எல்லை விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன அரசு ஆலோசகர் யாங் ஜீச்சி ஆகியோர் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டோக்லாம் உள்ளிட்ட எல்லைப் பகுதியில் அமைதி நிலவ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருதரப்பிலும் விரிவாக பேசப்பட்டது. இருதரப்பு உறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை பற்றி விவரித்தனர். இதுகுறித்து பேசிய மோடி, இந்தியா-சீனா இடையேயான உறவினால் இருநாட்டு மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்தியா-சீனா உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இந்தியா-சீனா இடையே நீடித்த டோக்லாம் எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.