உலகம்

காபூலில் வெடிகுண்டு தாக்குதல்: இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி கடும் கண்டனம்

JustinDurai
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரம் நிலைமை மோசமாக இருப்பதால் ஆப்கானியர்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வரவேண்டும் என ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாக்குதலுக்கு இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் துயரில் பங்கேற்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என கண்டனம் தெரிவித்திருக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எஞ்சியிருக்கும் நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு உதவ, பிரிட்டன் படையினர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உடனடியாக உதவ உலக நாடுகள் முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.