ரஷ்யா - உக்ரைன் போரில், Z எனும் குறியீடு பிரபலமடைந்து வருகிறது. இந்த குறியீட்டின் பின்னணி என்ன? விரிவாக தெரிந்துகொள்வோம்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆதரவளிப்பவர்களின் அடையாளமாக மாறி இருக்கிறது Z எனும் எழுத்து. புதினின் செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யர்கள் தங்கள் உடைகளில், வாகனங்களில், குடியிருப்புகளில் Z என இந்த எழுத்தை அச்சிட்டு தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதன்முதலில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பகுதிக்கு சென்ற ரஷ்யா வாகனங்களில் Z எனும் குறியீடு தென்பட்டது. பின்னாளில் உக்ரைனுக்குள் நுழைந்த அனைத்து ரஷ்யா ராணுவ வாகனங்கள் மற்றும் போர் தளவாடங்களில் இந்த குறியீட்டை காண முடிகிறது.
Z என்ற இந்த குறியீட்டுக்கு என்ன அர்த்தம்? என சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்தன. இதற்கு ZA POBEDY அதாவது வெற்றிக்காக என அர்த்தம் என்கின்றனர் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ ZAPAD என்ற மேற்கு என பொருள். அதன் குறியீடு தான் இது என்கின்றனர். சிலர் ஒரு படி மேலே சென்று, உக்ரைனில் ரஷ்யாவின் target செலன்ஸ்கி என்பதால் இந்த எழுத்தை அடையாளமாக கொண்டுள்ளனர் என கூறுகின்றனர்.
ஆனால், ரஷ்யா உக்ரைனில் தங்களின் ராணுவ வாகனங்களை அடையாளம் காணவும், தங்கள் போர் விமானங்களுக்கு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் இதனை பயன்படுத்துவதாக ராணுவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எனினும் ரஷ்யாவில் இது, தேசப்பற்றின் அடையாளமாக மாறிவிட்டது. இளைஞர்கள் இந்த எழுத்து அச்சிட்ட டி சர்ட்டுகளை அணிந்து புதினுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் ரஷ்யா ஜிம்னாஸ்டிக் வீரர், இவான் குலியக் Z எனும் எழுத்து அச்சிட்ட டி சர்ட்டை அணிந்து சர்ச்சையில் சிக்கினார்.
இதையும் படிக்க: 'காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்காது’- அதிபர் செலன்ஸ்கி