Saudi prince fear about houthis attack Reuters
உலகம்

பயந்து ஓடும் சவூதி இளவரசர்: பங்கர்களில் பதுங்கும் அரச குடும்பத்தினர்| அதிரடி காட்டும் ஹவுதி அமைப்பு!

ஹவுதி அமைப்பின் தாக்குதலுக்கு பயந்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அரண்மனை அரண்மனையாக மாறி வருவதாக முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Praveen Joshva L

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2014-2015 காலகட்டத்தில் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய ஹவுதி அமைப்பு ஏமனின் தலைநகரான சனா (Sanaa) உள்ளிட்ட பெரும்பாலான வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்த ஹவுதி அமைப்பிற்கு ஈரான் அரசு நிதி, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2015-இல் ஏமன் அரசுக்கு ஆதரவாகச் சவூதி அரேபியா தலைமையான கூட்டுப் படைகள் களமிறங்கின. எனினும் ஹவுதிகளின் எழுச்சியை இந்தக் கூட்டுப் படைகளால் தடுக்க முடியவில்லை.

houthis

இந்தச் சூழலில் சமீபத்தில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்கள் மீதும், எரிவாயுக் குழாய்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, ஏமன் மீது பெரிய அளவிலான தாக்குதலை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஹவுதிகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அப்படி தலைநகர் ரியாத்தை நோக்கி ஹவுதிகள் அனுப்பிய ஏவுகணை ஒன்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மாமின் அரண்மனைக்கு மிக அருகில் விழுந்ததாக கூறப்பட்டது.

இதன் காரணமாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தினமும் வேறு வேறு அரண்மனைக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறார் என்றும், அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல்' (The Wall Street Journal ) உள்ளிட்ட சில முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Mohammed bin Salman

அதோடு ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து இளவரசர் முகமது பின் சல்மான் பொதுவெளியில் தோன்றவில்லை என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல, அரச குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஹவுதி தாக்குதல் காரணமாக தங்கள் அரண்மனையில் உள்ள பங்கர்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இரு நாட்களுக்கு முன்னர் சவூதித் தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் (King Khalid International Airport) மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.