In Egypt, two trains collided at high speed. Reuters
உலகம்

அதிவேகத்தில் மோதிக்கொண்ட ரயில்கள் : தூக்கிவீசப்பட்ட பெட்டிகள்.. 100+ பயணிகளின் நிலை என்ன?

எகிப்தில் இரு ரயில்கள் அதிவேகத்தில் மோதிக்கொண்ட நிகழ்வில் ரயில் பெட்டிகள் பல அடி தூரம் தூக்கிவீசப்பட்டன.

Praveen Joshva L

எகிப்தின் தலைநகரான கெய்ரோவிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள அஸ்வான் (Aswan) நோக்கி 100க்கும் அதிகமான பயணிகளோடு நேற்று இரவு ஒரு பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் கெய்ரோவுக்கு தென்மேற்கே அமைந்துள்ள கிஸா (Giza) மாகாணத்தின் அல்-அய்யாத் (Al-Ayyat) பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஃபாயூம் (Fayoum) பகுதியில் இருந்து வந்த மற்றொரு ரயிலின் பின்புறமாக மோதியுள்ளது.

இந்த மோதல் காரணமாக ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நிலையில், பல ரயில் பெட்டிகள் கடுமையாக சேதம் அடைந்தன. இரவு நேரத்தில் இந்த மோதல் நடைபெற்ற நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர்.

ரயில் விபத்தில் காயமடைந்த பல பயணிகளை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் ரயில் பெட்டிகளை உடைத்து உள்ளே சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்டனர்.

எகிப்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த விபத்தில் தற்போதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பலர் தீவிர காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah el-Sisi) இந்த விபத்து குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான இழப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க அமைச்சரவைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக கிசா மற்றும் மேல் எகிப்து பிராந்தியத்திற்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விபத்துக்குள்ளான ரயில்களை அகற்றுவதற்காக ராட்சத இயந்திரங்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.