’தி டாவின்சி கோட்’ நாவலின் மூலம் புகழ்பெற்ற டேன் பிரவுனின் அடுத்த நாவல் ’ஆரிஜின்’ ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது.
தி டாவின்சி கோட் (THE DA VINCI CODE) நாவல் மூலம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டேன் பிரவுனின் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் நடந்த உலகப் புத்தகத் திருவிழாவுக்கு சென்றிருந்த டான் பிரவுன் தனது புத்தகத்தை வெளியிட்டார். ஆரிஜின் (ORIGIN) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த நாவல், பேராசிரியர் லாங்டன் என்ற பிரபலமான கதாபாத்திரத்தின் அடுத்தகட்ட சாகசம் பற்றியது. இவரின் முந்தைய நாவல்கள் உலகம் முழுவதும் உள்ள 52 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் சுமார் 280000 பார்வையாளர்கள் கூடும் உலகின் மிகப் பெரிய புத்தகத் திருவிழாவில் தனது புதிய நாவலான ஆரிஜின்-ஐ டேன் பிரவுன் வெளியிட்டார். அங்கு பேசிய டேன் பிரவுன், நான் மிகவும் உற்சாகமாகவும், நன்றி உணர்ச்சியுடனும் உள்ளேன். வெறும் 98 புத்தகங்களே விற்ற எனது முதல் நாவல் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் வருந்தக்கூடாது என்பதால் முதல் நாவலின் 50 பிரதிகள் எனது அம்மாவிற்கே சென்றுள்ளன. எனது அம்மாவின் அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இங்கு வந்துள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என்று பேசினார்.
முன்னதாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டேன் பிரவுன், தற்போது வெளியிட்ட எனது புதிய நாவலில் மனிதகுலத்தின் இரு அடிப்படையான கேள்விகளை குறித்து ஆய்வு செய்துள்ளேன். நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், இவையே அந்தக் கேள்விகள். நமது மதங்கள் வெவ்வேறானவை அல்ல. எப்போது வித்தியாசம் வருமென்றால், நாம் நமது மொழியை பயன்படுத்தும் போதும், மதம் சார்ந்தவைகளை தொகுக்க முயற்சிக்கும் போதும்தான் என்று கூறினார்.