உலகம்

பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் - விசாரணைக்கு பிரதமர் இம்ரான் உத்தரவு

rajakannan

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையின் போது, இந்து சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். 

சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீனா(13), ரீனா(15) ஆகிய இரண்டு சிறுமிகள் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வீடியோக்கள் தனித்தனியாக வெளியானது. அதில் ஒரு வீடியோவில் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக கூறினர். சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வைரலானது. சிறுமிகளின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது குறித்து வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் கவலை தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய உயர் ஆணையத்திடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சருக்கும் அவர் ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் சிந்து மாகாண முதலமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.