உலகம்

பாகிஸ்தான்: பதவி நீக்கத்தை எதிர்த்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம்

Veeramani

பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.



இதனைக் கண்டித்து லாகூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக குவிந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்திற்கு (பிடிஎம்) எதிராக முழக்கங்களை எழுப்பினர். பிடிஎம் என்பது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பாகும். இந்த அமைப்பு இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய ஒன்றாக இணைந்து செயல்பட்டது.

இந்த சூழலில், பதவி நீக்கத்தை கண்டித்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) உறுப்பினர்கள், இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், மலகாண்ட், முல்தான் கானேவால், கைபர், ஜாங் மற்றும் குவெட்டா உள்ளிட்ட பாகிஸ்தானின் பல நகரங்களிலும் போராட்டங்களை  நடத்தினர்.

முன்னதாக, பாகிஸ்தானில் "ஆட்சி மாற்றத்திற்கான வெளிநாட்டு சதி" உள்ளது எனவும், இதற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் அமைதியான முறையில் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்றும் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.



இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை   தவிர்க்க பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) அரசாங்கம் பல கட்டங்களாக முயற்சித்த போதிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி  அதிகாலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் மூலம், பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மான  வாக்கெடுப்பு மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான் கான் பெற்றார்.