உலகம்

அந்நிய சதி என்னஆச்சு?: அமெரிக்க எம்பியை சந்தித்த இம்ரான் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஜா. ஜாக்சன் சிங்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க எம்.பி. இல்கான் ஒமரை சந்தித்து பேசியது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் அகற்றப்பட்டார்.

தான் பதவி இழந்ததற்கு அமெரிக்காவின் சதிதான் காரணம் என பகிரங்கமாக இம்ரான் கான் குற்றம்சாட்டினார். மேலும் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசே, பாகிஸ்தானில் ஆட்சியில் அமர்ந்திருப்பதாகவும் அவர் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், அமெரிக்க எம்.பி. இல்கான் ஒமரை இம்ரான் கான் இன்று சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

இதனைக் கண்ட பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இம்ரான் கானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பதவி இழந்ததற்கு அமெரிக்காவை குற்றம்சாட்டிவிட்டு தற்போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரையே இம்ரான் கான் சந்தித்திருப்பது அவரது இயலாமையயையே வெளிப்படுத்துவதாக பெரும்பாலானோர் தெரிவித்து வருகிறார்கள்.