உலகம்

இன்று பதவியை ராஜினாமா செய்கிறாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்?

நிவேதா ஜெகராஜா

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக இம்ரான் கான் இன்று அறிவிக்கக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது

பாகிஸ்தானில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதற்கு இம்ரான் கான்தான் காரணம் எனக் கூறி அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையால்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

இம்ரான் கானுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் 24 எம்பிக்களும் எதிராக திரும்பியுள்ளனர். மேலும் இம்ரான் கான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 50 பேர் கடந்த சில நாட்களாக வெளியே தென்படவில்லை. இவர்களும் இம்ரானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் வெல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் இம்ரான் கான், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதில் தனது ராஜினாமா முடிவை இம்ரான் கான் அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கான் அரசு கவிழ்ந்தால் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில், கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரி இம்ரான் கான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாகவே இம்ரான் கான், அவராகவே பதவி விலக வேண்டும் எனக்கூறி, பதவி விலக அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், "என்ன வந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன்" என்று இம்ரான் கான் மறுத்திருந்தார். மேலும், “நான் சண்டையின்றி சரணடையப் போவதில்லை. மோசடிகளின் அழுத்தத்தின் கீழ் ஏன் விலக வேண்டும்?” என்றும் அவர் கேள்வியும் எழுப்பி இருந்தார்.