உலகம்

”என்ன ஒரு கிலோ நெய் 600 பில்லியனா?”.. இம்ரான் கான் பேச்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

webteam

”பாகிஸ்தான் பொருளாதாரம் புற்றுநோய்க்கு டிஸ்பிரின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்ளது” என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாகிஸ்தானில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் இம்ரான் கான், “புற்றுநோய்க்கு டிஸ்பிரின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக பாகிஸ்தானின் நிலைமை உள்ளது. இலங்கை இருந்த நிலையில்தான் தற்போதும் பாகிஸ்தானும் உள்ளது. இதே நிலைமை நீடித்தால் பாகிஸ்தான் மேலும் பாதிப்புக்குள்ளாகும்” எனத் தெரிவித்திருப்பதுடன் "பாகிஸ்தானில் 1 கிலோ நெய் பிகேஆர் 600 பில்லியனுக்கு விற்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

இவருடைய பேச்சுக்கு நெட்டிசன்கள் வலைதளத்தில் பதிலளித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், "பாகிஸ்தான் மக்கள் பெரும் பணக்காரர்கள்” எனப் பதிவிட்டிருப்பதுடன், "இம்ரான் கான் சொன்ன கணக்கு சிறப்பானது" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது, தேவையில்லாத செலவுகள் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் பரவி வருகிறது. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவரது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை செல்வதற்கு மட்டும் 984 மில்லியன் ரூபாய் செலவாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது, பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களின்படி, இம்ரான் கான் பயணத்திற்கு 472.36 மில்லியன் ரூபாயும், அதற்காக அவர் பயணித்த ஹெலிகாப்டரை பராமரிக்க 511.995 மில்லியன் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்