உலகம்

புளூட்டோவில் 7 கி.மீ உயரம் எழும்பும் பனி எரிமலைகள்.. விஞ்ஞானிகள் சொல்லும் ஆச்சர்ய தகவல்!

EllusamyKarthik

கடந்த 92 ஆண்டுகளுக்கு முன்னர் புளூட்டோவை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர். முதலில் கோள் என்றே இது அறிவிக்கப்பட்டது. 90-களில் வளர்ந்த பிள்ளைகள் எல்லாம் சூரியக் குடும்பத்தில் (Solar System) ஒரு கோள் என்றே புளூட்டோ குறித்து படித்திருப்பார்கள். ஆனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் அது வெறும் குறுங்கோள் என அறிவிக்கப்பட்டது. அது ‘கோளா அல்லது குறுங்கோளா?’ மர்மம் நீடித்த வண்ணம் உள்ளது. 

16 ஆண்டுகளுக்கு முன்னர் அது கோளாக இருக்க தகுதியில்லை என சொல்லப்பட்டது. இத்தகைய சூழலில் புளூட்டோவின் மேற்பரப்பில் பனி எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த பனி எரிமலை ‘கிரையோ வல்கனோ’ (Cryovolcano) என அழைக்கப்படுகிறது. இந்த பனி எரிமலை உறைந்த நீர், அம்மோனியா அல்லது மீத்தேன் மாதிரியானவற்றை வெளியேற்றும் என சொல்லப்படுகிறது. இதனை நாசா புளூட்டோ குறித்து ஆராய அனுப்பியுள்ள நியூ ஹரைசன்ஸ் விண்கலம் மூலம் அறிந்து கொண்டுள்ளனர் விஞ்ஞானிகள். 

இந்த ஆய்வு குறித்து Nature Communications இதழில் வெளியாகியுள்ளது. சூரியனிலிருந்து 5.8 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புளூட்டோ. அதன் மேற்பரப்பில் சமவெளிகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளவாம். 

சுமார் பத்துக்கும் மேற்பட்ட பனி எரிமலைகள் புளூட்டோவில் இருப்பதாகவும். அது 1 கிலோ மீட்டர் முதல் 7 கிலோ மீட்டர் உயரம் வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது புளூட்டோ ஆக்டிவாக இருப்பதாகவே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.