செய்தியாளர் - M.மீரா
அமெரிக்காவில் தனது பெரும்பாலான கன்சல்டிங் (Consulting) பணிகளுக்கு H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதை நிறுத்த IBM நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்காவில் வெளிநாட்டினரின் வேலை வாய்ப்பு மற்றும் குடியேற்றம் சார்ந்தவற்றை தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிநாட்டு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IBM நிறுவனத்தின் அமெரிக்க கன்சல்டிங் பிரிவில் பணியாற்றும், விசா ஸ்பான்சர்ஷிப்பை நம்பியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான கிரீன் கார்டு பெற முயற்சிப்பவர்களுக்கு இந்த முடிவு பின்னடைவாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இக்கொள்கை மாற்றத்தால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் உள்ள ஐபிஎம் கிளைகளில் பணியாற்ற வேண்டும் அல்லது நிறுவனத்தை விட்டு விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள பல இந்திய ஐடி ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய IBM செய்தித் தொடர்பாளர், திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா திட்டங்களில் நிறுவனத்தின் பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
2026 நிதியாண்டில் IBM நிறுவனம் 1,100-க்கும் அதிகமான H-1B விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அமேசான் நிறுவனம் இதே காலகட்டத்தில் 13,715-க்கும் அதிகமான விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளது. மற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, IBM நிறுவனம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதற்கிடையே, H-1B விசா திட்டம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு நடைமுறைகள் மீது டிரம்ப் நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.
IBM நிறுவனத்தின் இந்த முடிவு, அமெரிக்காவில் வேலை மற்றும் நிரந்தரக் குடியுரிமையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வெளிநாட்டு தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.