உலகம்

“காபூல் நகரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினேன்” - அஷ்ரஃப் கனி

EllusamyKarthik

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் படையினர் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார். அவரது செயலை பலரும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் தான் அப்படி செய்ததற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளார் அவர். 

பிபிசி ரேடியோ 4 டுடே நிகழ்ச்சியில் உரையாடியபோது அஷ்ரஃப் கனி அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். 

“வழக்கமானதொரு நாளாகத்தான் அன்றைய காலை பொழுது இருந்தது. நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என எண்ணவில்லை. எனது தாய் மண்ணில் அதுதான் எனது கடைசி நாள் எனவும் எண்ணவில்லை. காபூல் நகரின் இரு திசைகளிலும் தலிபான் படையினர் சூழ்ந்து இருந்தனர். எந்நேரமும் நகரம் தாக்கப்படலாம் என்ற சூழல். எங்களது படைக்கு அவர்களை எதிர்த்து போரிட்டு வெல்லும் வல்லமை இல்லை. அப்படியே போரிட்டாலும் சுமார் 50 லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் நகரத்தின் நலன் கருதி வெளியேற முடிவு செய்தேன். 

எனது பாதுகாப்பு அதிகாரி எனக்கு வெறும் இரண்டு நிமிடங்கள்தான் கொடுத்தார். நான் Khost நகரத்திற்கு செல்லலாம் என சொன்னேன். ஆனால் அந்த நகரத்தை தலிபான்கள் ஏற்கனவே கைப்பற்றி விட்டதாக என அவர் சொல்லி தெரிந்து கொண்டேன். பின்னர் எங்கு செல்வது என எதுவுமே தெரியாமல் எனது வானூர்தி டேக் ஆஃப்-ஆனது. நாட்டை விட்டு பல ஆயிரம் அடி உயரம் பறந்தேன்” என அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார். 

முதலில் அவர் தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். பின்னர் அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தஞ்சம் புகுந்தார். இந்த பேட்டி கூட அங்கிருந்துதான் அவர் கொடுத்துள்ளார்.