அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பல மாதமாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் உலகையே முடக்கியுள்ளது. போர் முடிவுக்கு வரும் சூழல் ஏதும் இல்லாததால் உலகமே ஒரு குழப்ப நிலையை அடைந்துள்ளது. அதே நேரம் இந்த போர் காரணமாக அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு டிரம்ப்புக்கு இருக்கும் செல்வாக்கும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான் போரில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை, அமெரிக்கா முன்னெடுத்த முந்தைய போர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரான் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்திருந்த பல்வேறு பகுதிகள் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் டிரம்ப் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார். அதில், ஆப்கானிஸ்தான் போர் 20 ஆண்டுகள் நீடித்து 2,000 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்றும், ஈராக் போர் 9 ஆண்டுகள் நீடித்து 4,600 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.
மேலும், வியட்நாம் போர் 19 ஆண்டுகள் 5 மாதங்கள் நீடித்து 58,220 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்றும், கொரியப் போர் 3 ஆண்டுகள் 1 மாதம் நீடித்து 36,574 உயிரிழப்புகளை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார். அதோடு நான் மேற்கொண்ட வெனிசுலா ராணுவ நடவடிக்கை 1 நாளில் உயிரிழப்பே இல்லாமல் முடிந்தது என்றும், 4 மாத ஈரான் போரில் வெறும் 18 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்த கருத்துக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.