மெக்சிகோ வளைகுடாவில் உருவான இசாயஸ் புயல் புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 168 கிமீ வேக காற்று, கனமழை, வெள்ளம், மின்தடை உள்ளிட்ட விளைவுகள் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. புயல் வீடியோக்கள் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
செய்தியாளர் - கார்த்திகேயன்
மெக்சிகோ வளைகுடாவின் தென்மேற்கு பகுதியில் உருவான புயல் தான் இசாயஸ். இந்த புயல், அமெரிக்காவின் புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களை கடுமையாக தாக்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால, 168 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதோடு, 15 அங்குலம் அளவிற்கு கனமழை பெய்து, பெரும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய 3-ஆம் வகை புயலாக இருந்த இது, பின்னர் 2-ஆம் வகை புயலாக மாறி, மக்களை வாட்டி வதைத்தது. இறுதியில், 1-ஆம் வகை புயலாக மாறி, புளோரிடாவின் பான்ஹேண்டில் பகுதியில் உள்ள டெஸ்டின் நகருக்கு அருகில் கரையைக் கடந்தது. இது 2026 ஆம் ஆண்டில், அட்லாண்டிக் புயல் பருவமழைக் காலத்தில் உருவான முதல் புயல் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, நெட்டிசன்கள் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது, புயல் நெருங்கியபோது பென்சகோலா நகரின் வானிலை மோசமடைந்தது. அங்கு கடுமையான காற்று, கொந்தளிப்பான கடல் மற்றும் புயல் சூழல் நிலவிய புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும், இணையத்தில் வெளியாகியுள்ளன. சண்டா ரோசா சவுண்ட் அருகே மணிக்கு 97 மைல் வேகத்திலும், பென்சகோலா சர்வதேச விமான நிலையத்தில் மணிக்கு 71 மைல் வேகத்திலும் காற்று வீசியது, வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த புயலால் மின்தடை ஏற்பட்டு, 6 லட்சத்து 68 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில், 4 முதல் 8 அடி வரையில் கனமழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பகுதிகளில், சுழல்காற்று அச்சுறுத்தல் தொடரும் என்றும், வெள்ளம் சூழ்நதுள்ள சாலைகளில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது அலபாமா வழியாக டென்னசி பள்ளத்தாக்கை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலத்த காற்று வீசுவதனால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் ஆபத்து தொடர்கிறது.