உலகம்

தவறான வானிலை முன்னறிவிப்பு: வானிலை ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது ஹங்கேரி அரசு!

ச. முத்துகிருஷ்ணன்

தவறான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக தேசிய வானிலை சேவையின் வானிலை நிபுணர்கள் இருவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்கேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாளில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டும். குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதாபெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாகும்.

இந்நிலையில் ஆகஸ்ட் 20 அன்று புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வானவேடிக்கை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் புதாபெஸ்டில் குவிந்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக புதாபெஸ்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சிகளை அரசு ரத்து செய்தது. இதனால் வானவேடிக்கை நிகழ்ச்சிகளை காண காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி புதாபெஸ்டில் மழை பெய்யவில்லை. இதனால் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியவில்லை என்று ஹங்கேரி மக்களிடையே எதிர்ப்புகளும், அதிருப்தியும் எழுந்தன.

தவறான முன்னறிவிப்புக்காக தேசிய வானிலை ஆய்வு மையம் சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியது. இருப்பினும் இந்த விவகாரத்தில் வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர்கள் 2 பேரை அரசு பணி நீக்கம் செய்துள்ளது.