உலகம்

மனித எலும்புகளுடன் கரை ஒதுங்கும் படகுகள்: சீனாவை குற்றஞ்சாட்டும் ஜப்பான் !

jagadeesh

மனித எலும்புக் கூடுகளுடன் அமானுஷ்யங்கள் கொண்ட வட கொரிய கப்பல்கள் வேண்டுமென்றே தங்களது கடற்கரைகளில் ஒதுங்குவதற்கு சீனாதான் காரணம் என ஜப்பான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து "தி சன்" நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக இருக்கும் 5 பேரின் சடலங்களும் ஜப்பான் கடலோர காவல்படை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 வடகொரியர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

வடகொரிய கடலில் சட்டவிரோதமாக மீன் பிடிக்க சீனா ஆயுத பலத்துடன் கப்பல்களை அனுப்புகிறது. இதனால் அப்பாவி வடகொரிய மீனவர்கள் தங்களது படகுகளில் செல்லும்போது தங்களது உயிரை பணயம் வைக்கின்றனர் என்று பகிரங்கமாக குறறஞ்சாட்டுகிறது ஜப்பான். மேலும் கடலின் சீற்றம் தாங்க முடியாமல் பல வடகொரிய மீனவர்கள் கரை திரும்பாமல் போனதாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் சீனாவின் ஆதிக்கத்தை கண்டு கொள்ளாத கிம் அரசு, மறுபக்கம் உணவு தட்டுப்பாட்டை சமாளிக்க மீனவர்களை கடலுக்குச் செல்ல கட்டாயப்படுத்தியும் வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில், கடல் அலைகளில் சிக்கி, படகு கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுமார் 50 வடகொரிய மீனவர்களை  ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.