பேரிடர் காலங்களில் மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தும் வகையிலான ரோபோக்கள் ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகின் பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோக்கள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ரோபோ கண்காட்சி நடைபெற்றது. இதில் கவாசாகி நிறுவனம் தயாரித்துள்ள HUMANOID ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது.
பேரிடர் காலங்களில் மனிதர்களை போலவே மீட்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கலெய்டா என பெயரிட்டுள்ளனர். இந்தக் கண்காட்சியிலேயே கலெய்டா ரோபோவின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பேரிடரில் சிக்கி எப்படி மீட்புப் பணியில் ஈடுபடும் என செய்து காட்டப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை இந்த ரோபோ எவ்வாறு மீட்கும் என செயல் விளக்கம் காட்டப்பட்டது.
கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்ட கலெய்டா ரோபோ, திட்டமிட்ட ஆபத்தில் சிக்கி இருக்கும் நபரை போல வைக்கப்பட்டிருந்த பொம்மையை பத்திரமாக மீட்டு வந்தது. அதிக எடை கொண்ட பொருட்களையும், மனிதர்களையும் எளிதில் தூக்கும் வண்ணம் இந்த ரோபோவின் கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்றவற்றில் சிக்கியோரை மீட்கும் போது பல்வேறு சவால்களை மனிதர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அந்த இடங்களில் இத்தகைய ரோபோக்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் இதனை வடிவமைத்தவர்கள். குறிப்பாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை இடர்களை சந்திக்கும் ஜப்பானில் இத்தகைய ரோபோக்களின் தேவை அதிகம் இருக்கும் என்றே கூறப்படுகிறது