கொரோனாவை வெல்வதற்கு நம்மிடம் இப்போதைக்கு இருக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். அந்த தடுப்பூசியைக் கொண்டு இன்று தன் நாட்டு மக்களை முழுமையாக பாதுகாத்திருக்கும் நாடு, இஸ்ரேல். இஸ்ரேலில் இதுவரை பெரும்பான்மை மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு அரசு சொல்லியிருக்கிறது. இதன் விளைவாக, அவர்கள் குறிப்பிட்ட வகை கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டனர் என சொல்கிறது அந்நாட்டு அரசு.
இஸ்ரேல் மக்கள் தொகையில் 81 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் 16 வயதுக்கு மேற்பட்டோர். இவர்கள் அனைவருக்கும்தான், அந்நாட்டு அரசு தடுப்பூசி போட்டுள்ளது. சில சதவிகிதத்தினர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலும் இருக்கின்றார்கள். ஆனால், பெரும்பான்மையானோர் போட்டுக்கொண்டதால், நாட்டில் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் 'குழு நோய் எதிர்ப்பு சக்தி' கிடைத்திருக்கிறது என மருத்துவர்கள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் எப்படி கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் அங்கீகாரம் பெற்றுள்ளதோ, அப்படி இஸ்ரேலில் பி-பிசர் மற்றும் பயோ-என்-டெக் ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 2021-ல்தான் இஸ்ரேலில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்ப்படும் பணிகள் தொடங்கப்பட்டன என்றாலும்கூட, இஸ்ரேலில் மக்கள் தொகை குறைவு என்பதால், இந்தக் குறுகிய காலகட்டத்தில் அந்நாட்டு அரசு பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசியை விநியோகித்துவிட்டது என சொல்லப்படுகிறது.
கழற்றி வீசப்படும் மாஸ்க்: தங்கள் நாட்டினை, 'கொரோனாவை வென்ற நாடு' என உலகுக்கு உணர்த்தும் வகையில், அந்நாட்டின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரேலின் பலதரப்பட்ட மக்கள் தங்களின் மாஸ்கை கழற்றி வீசும் வகையிலான வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன், அந்நாட்டே அரசே பதிவிட்டிருந்தது. 'இனி மாஸ்க் அணியும் நிர்ப்பந்தம் தங்களுக்கு இல்லை' என்பதை அவர்கள் அவ்வாறு குறிப்பால் உணர்த்தியிருந்தனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Masking in our glory, because masks are no longer required outdoors in <a href="https://twitter.com/hashtag/Israel?src=hash&ref_src=twsrc%5Etfw">#Israel</a>! <a href="https://t.co/8bfvuy5oyS">pic.twitter.com/8bfvuy5oyS</a></p>— Israel ישראל (@Israel) <a href="https://twitter.com/Israel/status/1384088108770029576?ref_src=twsrc%5Etfw">April 19, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இஸ்ரேல் என்னதான் மாஸ்க் பயன்பாட்டை குறைத்தாலும், இப்போதும் இஸ்ரேல் ஒரு சில கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்கிறது. அதில் முதன்மையானது, தடுப்பூசி பயன்பாடு. இதற்கு அடுத்தபடியாக, அவசியமில்லா காரணத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தடைவிதித்திருப்பது.
அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இஸ்ரேலை பூர்விகமாக கொண்டவர்கள் சொந்த நாட்டுக்கு எந்தவகையில் வந்தாலும், அவர்களுக்கு 2 வார தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
கொரோனாவை பொறுத்தவரை, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வித பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்த காரணம், அவை அடிப்படையிலேயே உருமாறும் தன்மை கொண்டவை என்பதால்தான். அந்தவகையில், எந்த நாட்டில் என்ன மாதிரியான கொரோனா பரவுகிறது என்பதை இஸ்ரேல் கவனித்து வருகிறது. தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா, தங்கள் நாட்டுக்குள் வந்துவிடாதபடி தங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறது இஸ்ரேல். உதாரணத்துக்கு, இப்போது இந்தியாவை தாக்கிவரும் கொரோனா பற்றி அறிந்துக்கொண்டு, அது தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்படி தங்களின் முயற்சியால் கொரோனாவை வென்றுவிட்டதை தொடர்ந்து, மக்கள் கூட்டத்துக்கான தடைகள் அங்கு தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இஸ்ரேலில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் கோலகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் தடையின்றி அனுமதிக்கப்படுகின்றனர். முடிந்தவரை, சௌகரியமான சூழல் நிலவும்போது மாஸ்க் அணியவும் என, மாஸ்க் அணிவதை சொந்த விருப்பத்தின்கீழ் அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
இஸ்ரேலில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வயது வேறுபாடின்றி திறக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இஸ்ரேல் இன்னமும் தடுப்பூசி விநியோகத்தை தொடங்காததால், மாணவர்கள் - குழந்தைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. அதன்மூலம், தங்கள் நாட்டை முழுமையாக காத்துக்கொள்ளலாம் என இஸ்ரேல் நினைக்கிறது.
'க்ரீன் பாஸ்' முறை: இன்னும் சில பெரியவர்கள் இஸ்ரேலில் தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர் என்பதால், அவர்களை தடுப்பூசி போடவைக்கும் முயற்சியையும் அந்நாட்டு அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதற்கு இஸ்ரேல் அரசாங்கம் ஒரு நூதன வழியை கடைபிடித்து வருகிறது. அந்த வழி, தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக சலுகை வழங்குவது. உதாரணத்துக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களால் மட்டும்தான், பொது இடங்களில் அனைத்துவித உரிமைகளையும் எடுத்துக்கொள்ள முடியும்; இவர்களுக்கு மட்டும்தான் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் உரிமையுண்டு. அதேபோல இவர்களால்தான் கேளிக்கை விடுதிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்!
இதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரை தனியாக அடையாளம் காண வேண்டும் என்பதால், 'க்ரீன் பாஸ்' என்ற பெயரில் ஓர் அடையாள அட்டையை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டை இருப்பவருக்கு சலுகை!
ஆக, இந்த சலுகைகளுக்காகவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெரியவர்களும், இப்போது போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி விழிப்புணர்வை விடவும், இப்படி சலுகைக்காக தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும்.
இஸ்ரேலின் இந்த தடுப்பூசி நடவடிக்கை, கடந்த மாதங்களில் அவர்கள் அமல்படுத்திய முழு முடக்க நடவடிக்கைகள், இப்போது அவர்கள் கடைபிடிக்கும் பயண கட்டுப்பாடுகள் போன்றவைதான் இன்று அவர்களை கொரோனாவை வென்ற நாடாக மாற்றியுள்ளது.
ஒருவேளை இந்தியாவும் இவற்றையெல்லாம் பின்பற்றினால், நாமும் கொரோனாவை வென்ற நாடாகலாம். எனினும், இஸ்ரேலை விடவும் இந்தியா மிக மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஆகவே, நமக்கு நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. பயணம் - போக்குவரத்து - மருத்துவ வசதிகள் சார்ந்த நடைமுறை சிக்கல்களைத் தாண்டி, இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தையாவது அதிகப்படுத்தினோமேயானால் நம்மால் சூழலை சமாளிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
- தகவல் உறுதுணை: India Today