mossad
mossad pt web
உலகம்

அப்படி என்ன சாதித்தது இஸ்ரேலின் மொசாத்? அதன் முரட்டுத்தனமான வரலாறு

PT WEB

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புப் படை உலகின் சிறந்ததாக வெளிபட முக்கிய காரணம் மொசாத். அப்படிப்பட்ட உளவு அமைப்பை தாண்டி ஹமாஸ் படை ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை முன்கூட்டியே அறியவில்லை என்பது மொசாத் அமைப்பின் மிகப்பெரிய தோல்வியாகவே கருதப்படுகிறது.

அமெரிக்காவின் சிஐஏ, இந்தியாவின் ரா அமைப்புகளுக்கு உதவிய மொசாத், ஹமாஸ் படையின் தாக்குதலை கணிக்காதது அதன் முரட்டுத்தனமான வரலாற்றில் இடப்பட்ட கரும்புள்ளி. ஏன் இப்படி ஒரு விமர்சனம் என்ற கேள்வி எழுவது சகஜம்தான். மொசாத் உளவு அமைப்பின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழாது.

இஸ்ரேல் நாடு உருவானபோது மற்ற நாடுகளின் தாக்குதலை சமாளிக்க உருவாக்கப்பட்ட உளவு அமைப்புதான் மொசாத். தொடக்கத்தில் உள்நாட்டில் மட்டுமே செயல்பட்ட மொசாத் அதன் பின்னர் வெளிநாடுகளிலும் ஊடுருவி அந்நாடுகளின் திட்டங்களை அறிந்து இஸ்ரேலுக்கு ஏதும் அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக அரசை உஷார்படுத்தி வந்தது. பின்நாட்களில் சிறந்த ராணுவ வீரர்கள் அக்குழுவில் சேர்க்கப்பட்டதும் அதன் பலம் பன்மடங்கு உயர்ந்தது.

அதற்கு ஒரு சான்றாக அமைந்தது உகாண்டா விமான நிலைய அதிரடி மீட்பு. இஸ்ரேலுடன் நட்பு நாடாக இருந்த இடியமின் ஆண்ட உகாண்டா பின்நாட்களில் பாலஸ்தீனிய ஆதரவு நாடாக மாறியது. அப்படி மாறிய நிலையில் இஸ்ரேலியர்கள் பயணித்த விமானத்தை 4 பேர் கொண்ட பாலஸ்தீனிய ஆயுத படை கடத்தி உகாண்டா எடுத்துச் சென்றது.

பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்களை விடுவிக்க இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தை ஒரு புறம் இஸ்ரேல் அரசு நடத்த, மக்களை மீட்க மொசாத் அமைப்புக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அரபு நாடுகளின் ரேடார்களில் சிக்காமல் விமானத்தில் பறந்த மொசாத் வீரர்கள், உகாண்டாவில் தரையிறங்கி அந்நாட்டு பாதுகாப்பு படையையும், பாலஸ்தீனிய ஆயுதப்படையினரையும் சுட்டு வீழ்த்தி தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வந்தது. இது ஒரு சான்றுதான்.

அடால்ஃப் ஈஷ்மேன்

மேலும் மொசாத் குழுவினரின் சாதனை பட்டியலில் 1960-ல் அர்ஜெண்டினாவில் மறைந்திருந்த அடால்ஃப் ஈஷ்மேனை கைது செய்து இஸ்ரேலுக்கு அழைத்து வந்து போர்க்காலக் குற்றங்களுக்காக விசாரிக்க வைத்தது, மியூனிக் ஒலிம்பிக்லில் கொல்லப்பட்ட 11 இஸ்ரேலிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அவர்களது கொலைக்கு காரணமாக இருந்த தீவிரவாதிகளைத் தேடிக் கொன்றது, ஈராக்கின் அணுமின் நிலையத்தைத் தகர்த்தவை இடம்பெறுகின்றன.

இது மட்டுமின்றி வெளிநாட்டு அரசியலில் உளவு பார்ப்பதையும் மொசாத் குழு தொடர்ந்து வருகிறது. மக்களோடு மக்களாக உள்ள உளவு படையினர் நாட்டின் முக்கிய ரகசியங்களையும் தோண்டி எடுக்கும் திறனை கொண்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் சாதாரண அப்பாவி மக்கள் மொசாத் எனக் கூறப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்றால், மொசாத் குழுவின் மக்களோடு மக்களாய் வாழும் திறனை அறிய முடியும்.

இப்படிதான் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக அமெரிக்க அரசிடம், தீவிரவாதிகள் பலர் அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். மிகப்பெரிய தாக்குதல் நடத்த உள்ளனர் என மொசாத் அமைப்பு எச்சரித்தாக கூறப்படுகிறது. லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதி ஒருவரை கைது செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கும், இந்தியாவின் ரா அமைப்பிற்கும் பல்வேறு வழிகளில் மொசாத் உதவியிருக்கிறது.

இப்படி சர்வதேச நாடுகள், உலகின் பெரிய பலம் கொண்ட நாடுகளுக்கு உதவிய இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதையும் மிக எளிதில் கண்டறிந்து இத்தனை ஆண்டுகள் தடுத்து வந்தது. ஆனால், ஹமாஸில் தற்போதைய தாக்குதல் திட்டத்தை கண்டறிவதில் தோல்வியுற்றுள்ளது. இது உலக நாடுகள் இடையே இஸ்ரேலின் பாதுகாப்பு பலம் குறித்த பிரம்மாண்ட பார்வையை சுருக்கியுள்ளது என்றால் மிகையாகாது.