உலகம்

கொரோனா எங்கிருந்து உருவாகி இருக்கும்? - விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பு

கொரோனா எங்கிருந்து உருவாகி இருக்கும்? - விளக்கம் அளித்த உலக சுகாதார அமைப்பு

webteam

கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்தே பரவி இருக்கலாம் என்றும், ஆதாரங்களும் இதனையே தெரிவிக்கின்றன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

 உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் எங்கிருந்து இந்த கொரோனா பரவியது என்பதும் பல விவாதங்களை எழுப்பியுள்ளன. கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா அல்லது வேறு உயிரினங்களிடம் இருந்து பரவியதா என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

அமெரிக்காவும், சீனாவும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கின்றன. விலங்குகள் மூலமே கொரோனா பரவி இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதா என்பதை அறிய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் கூறி இருந்தார்.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஃபடேலா சைப், நம்மிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தும், விலங்கிடம் இருந்தே வைரஸ் உருவானது என்பதை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஆய்வகத்தில் இருந்து வைரஸ் உருவாக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். வௌவால்களிடம் இருந்தே பரவி இருக்கலாம் என்றும், ஆதாரங்களும் இதனையே தெரிவிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.