Yemen Reuters
உலகம்

ஏடனை நெருங்கும் ஹவுதிகள்.. ட்ரோன்களால் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்ட சவூதி வீரர்கள்!

ஏடனை நோக்கி வேகமாக முன்னேறும் ஹவுதிகள்: சவுதி ஆதரவு படைகளுக்கு பெரும் சவால்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஏமனில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்-மகதிரா மாவட்டத்தில் அரசுப் படைகளின் நிலைகளை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு அந்த மாவட்டம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது..

தற்போது ஏமனின் அதிகாரப்பூர்வ மற்றும் தற்காலிகத் தலைநகராக விளங்கும் ஏடன் (Aden) நகரை நோக்கி ஹவுதிகள் மிக வேகமாக முன்னேறி வருவதால், அங்கு உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏடன் நகருக்கு மிக அருகில் (சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிற்குள்) வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

yemen

ஏமனின் அதிகாரப்பூர்வ தலைநகரான சனா (Sanaa) ஏற்கெனவே ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏடன் நகரம்தான் தற்போதைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசின் பிரதான அரணாகச் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையம் வழியாக வர்த்தகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும், ஏடன் வளைகுடாவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம், உலகின் முக்கியக் கடல்வழிப் பாதைகளில் ஒன்றான பாப் அல் மண்டெப் ஜலசந்திக்கும் அருகில் உள்ளது. எனவே, ஏடன் நகரை ஹவுதிகள் கைப்பற்றினால், அது ஏமனின் அரசுப் படைகளுக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.

drones

சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசுப் படைகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்க்க ஹவுதிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வான்வழியாக 'ஷவாஸ்' (Shawaz) மற்றும் 'ரஜூம்' (Rajum) போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு ஹெக்சாகாப்டர் (Hexacopter) ட்ரோன்கள் மற்றும் எஃப்.பி.வி (FPV) தற்கொலை படை ட்ரோன்களைப் பயன்படுத்தி, அரசுப் படைகளின் ஆயுதம் ஏந்திய கவச வாகனங்களை வெடிக்கச் செய்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஹவுதிகளின் இந்தத் திடீர் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த, சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை பன்மடங்கு அதிகரித்துள்ளன. F-15 மற்றும் டைபூன் போர் விமானங்களைக் கொண்டு ஹவுதிகளின் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட வான்வழித் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஏடன் நகரைத் தக்கவைக்க இருதரப்பினரும் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேறி வருகின்றனர்.