iran war  web
உலகம்

தீவிரமடையும் போர்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. ஈரானுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஹவுதி!

இஸ்ரேல் மீதான ஏமனின் முதல் தாக்குதலால் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் விரிவடைகிறது.

PT WEB

ஏமன் ஹவுதி குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, தாங்கள் தாக்குதலைத் தொடங்கும் நிலையில் இருப்பதாக அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, அவர்கள் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது ஒரு வான்வழித் தாக்குதலை – அதாவது அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை – நடத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தால், போரில் தாங்களும் இணைவோம் என தெஹ்ரான் ஆதரவு ஹவுதிகள் எச்சரித்த ஒருநாள் கழித்து, ஏமனில் இருந்து முதல் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியிருக்கிறது ஹவுதி குழு. இதனை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்திருக்கிறது

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியது. இரு தரப்புக்குமான போர் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் திட்டவட்டமாகக் கூறியது. இருதரப்பிலும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Houthis

இந்நிலையில் மோதல் நீடித்து வருவதால், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி இயக்கம், தனது கூட்டாளி நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு தொடர்ந்தாலோ அல்லது மேலும் பல நாடுகள் மோதலில் இணைந்தாலோ தாங்களும் போரில் சேருவோம் என்று நேற்று எச்சரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) ஏமனிலிருந்து ஹவுதிகள் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹவுதிகள் ஏவிய ஏவுகணையை இடைமறிக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்புப் படைகள் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

ஈரான், லெபனான், ஈராக் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்துத் தாக்குவதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஹவுதிகள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளன.

iran war

2023 அக்டோபரில் இஸ்ரேல் காசா மீது தொடுத்த போரின்போது, ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, செங்கடலில் உள்ள கப்பல்களைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கியதோடு, இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். ஈரான் மீது தரை வழித் தாக்குதலை நடத்த கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மேற்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அனுப்பவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் 10 லட்சம் ராணுவ வீரர்களை தயார்படுத்தி வைத்திருக்கும் நிலையில் ஹவுதிகளும் போரில் இணைந்துள்ளனர்.