உலகம்

"எதுவும் நம்மைத் தடுக்காது...'' - அமெரிக்க வன்முறையில் இறந்த பெண்ணின் பின்னணி!

webteam

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையில் இறந்த பெண்ணின் பின்னணி விவரங்களை அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் இன்று கூடியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நினைத்தபடி முடிவடையவில்லை. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 மைல் தொலைவில் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். ஜோ பைடனுக்கு எதிராக குரல் எழுப்பினர். அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடாதென முழக்கமிட்டனர்.

பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் விவரங்கள் தெரியவந்துள்ளன. ஆஷ்லி பாபிட் என்பது அவரின் பெயர். அந்தப் பெண் உள்ளூர் ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கலவரம் தொடர்பாக தொடர்ந்து ட்வீட் செய்துகொண்டு இருந்துள்ளார்.

கலவரம் தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன் "எதுவும் நம்மைத் தடுக்காது... அவர்கள் முயன்றுகொண்டே இருக்கட்டும். ஆனால், புயல் இங்கே உள்ளது, அது 24 மணி நேரத்திற்குள் டி.சி மீது இறங்குகிறது... இருட்டிலிருந்து வெளிச்சம்!" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பெண் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இறந்த ஆஷ்லி சுற்றுலா தொடர்பான பணிகளில் கடந்த 14 வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார். தீவிர ட்ரம்ப் ஆதரவாளர். இவர் அமெரிக்க விமானப்படையுடன் நான்கு சுற்றுப்பயணங்கள் செய்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், பெருநகர காவல் துறைத் தலைவர் ராபர்ட் ஜே கான்டி, இறந்த பெண் ஆஷ்லிதான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்று கூறியுள்ளார்.