உலகம்

அமெரிக்காவில் பணயக் கைதியாக பிடிக்கப்பட்ட 4 பேர் மீட்பு

கலிலுல்லா

அமெரிக்காவில் யூத வழிபாட்டுத்தலத்தில் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டு வைத்திருந்தவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளனர்

அமெரிக்காவின் டெக்சாசில் யூத வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. அதற்குள் வழிபாட்டுக்காக சென்றிருந்தவர்களை தான் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக ஒரு நபர் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். அமெரிக்க சிறையில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞானியை விடுதலை செய்தால் மட்டுமே பணயக் கைதிகளை விடுவிக்கப்போவதாக அந்த நபர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபருடன் டெக்சாஸ் மாகாண அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 10 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் காவல் துறையினர் வழிபாட்டுத்தலத்திற்குள் சென்றனர்.

இதைத் தொடர்ந்து பணயக் கைதிகள் 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டெக்சாஸ் மாகாண ஆளுநர் அப்பாட் தெரிவித்தார். தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 4 பேரும் மீட்கப்படுவதற்கு முன் வழிபாட்டுத்தலத்திற்குள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் பணயக் கைதிகள் எப்படி மீட்கப்பட்டனர், அவர்களை பிடித்தவர் நிலை என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலரை கொன்ற புகாரில் பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அல்கய்தா இயக்கத்தினருடன் அவருக்கு தொடர்பிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரை விடுவிக்க கோரி 4 பேர் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டிருந்தனர்.