உலகம்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் ஆணவக் கொலை - நீதிமன்றத்தில் மகளை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை

JustinDurai

பாகிஸ்தானில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.

பாகிஸ்தான் நாட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய அவர் கராச்சியில் கணவருடன் வசித்து வந்தார். இவ்விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டதாகவும் என்பதை கூறுவதற்காக, இவர் நேற்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த இவரது தந்தை மகளை நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்த போலீசார், ஆணவக் கொலை செய்த தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தானில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன. பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 650 கவுரவக் கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.