ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ்  எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | தேசத் துரோக வழக்கில் கைதான இந்து மதத் தலைவர்.. 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்!

தேசத்துரோக வழக்கில் ஆன்மீகத் தலைவர் சின்மோய் கிருஷ்ணா தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால், கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போராட்டத்தின்போது, வங்கதேசக் தேசியக் கொடியை அவமதித்ததாகத் தேசத் துரோகம் உள்பட 18 வழக்குகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்திருந்தார். அவரது கைது நடவடிக்கை வங்கதேசத்தில் மேலும் போராட்டங்களைத் தூண்டியது.

ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ்

கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, சட்டோகிராம் நீதிமன்ற கட்டடத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்களுக்கும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் இறந்தார். இதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் மேலும் இறுக்கமடைந்தன. அவருடைய கைதுக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், தேசத்துரோக வழக்கில் சின்மோய் கிருஷ்ணா தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.