உலகம்

சாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் !

சாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் !

webteam

சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டு பர்கருக்காம காத்திருந்த பில்கேட்சின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவரை வசதி குறித்து விளையாட்டாக கிண்டல் செய்வதற்கு 'இவரு பெரிய பில்கேட்சு' என்று நாம் பொதுவாக சொல்லுவோம். பணக்காரர் என்றாலே முதலில் நம் நினைவில் வருவது பில்கேட்ஸ் தான். 95 பில்லியன் அமெரிக்க டாலர்களை சொத்து மதிப்பாக கொண்ட பில்கேட்ஸ் உலக அளவில் உதவி செய்வதிலும் முன்னோடியானவர். இத்தனை பெரிய பணக்காரர் சாலை ஓரத்தில் பாக்கெட்டுகளில் கையைவிட்டபடி பர்கருக்கு காத்திருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தின் அருகிலுள்ள பெல்வியூவ் பகுதியில் பர்கர் சாப்பிட சென்றுள்ளார் பில்கேட்ஸ். தனக்கான உணவை ஆர்டர் செய்த அவர், அது வரும் வரை சாலையில் ஓரம் நின்று அமைதியாக காத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனை கண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மைக் காலோஸ் என்பவர் அவரைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், 95 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உரிமையாளர். உலகத்தின் முன்னணி கொடையாளர். 

இவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் சாதாரண மனிதர் போல கடைக்குச் சென்று பர்கர் ஆர்டர் செய்த பில்கேட்ஸை பாராட்ட வார்த்தைகள் இல்லை. பணக்காரர்கள் பில்கேட்ஸ் போன்று நடந்து கொள்ள வேண்டுமே தவிர வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு தங்கக்கழிவறையுடன் போஸ் கொடுக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபரை மறைமுகமாக சாடியுள்ளார்.

 மைக் காலோஸஸின் பதிவு 17ஆயிரத்துக்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து இத்தனை எளிமையான மனிதராக இருக்கும் பில்கேட்சை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றும், பில்கேட்சிடம் இருந்து எளிமையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.