உலகம்

பேச்சுவார்த்தை எதிரொலி: சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுவிப்பு

பேச்சுவார்த்தை எதிரொலி: சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுவிப்பு

webteam

மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீனாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. சீன ராணுவத்தினரின் அத்துமீறலே மோதலுக்கு காரணம் என இந்திய ராணுவமும், இந்திய வீரர்களின் அத்துமீறலே காரணம் என சீன ராணுவமும் குற்றம் சாட்டுகிறது.

இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துகொள்ளலாம் என சீனா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து சீனா - இந்தியா இடையே உயர்மட்ட அதிகாரிகள்அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 16 முதல் 18ம் தேதி வரை மூன்று கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவாக சீனாவால் சிறைபிடிக்கப்பட்ட 2 உயரதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு சீன-இந்தியா போருக்குப் பின்னர் இந்திய வீரர்கள் சீனத் தரப்பினரால் சிறைப்பிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. முன்னதாக மோதல் குறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கையில் சீனாவால் கைது செய்யப்பட்ட இந்திய வீரர்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.