வடக்கு இமயமலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையாக மழைப் பெய்து வருகிறது. இதனால், இமயமலையை ஒட்டியுள்ள நேபாளம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு வாரமாக தொடர் கனமழை காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டார்ஜிலிங்க் மாவட்டம் மிரிக் என்ற இடத்தில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் காணமல் போயுள்ளனர். இதையடுத்து, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவுகள் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் நடந்த இடங்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.
நேபாள நாட்டில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் சிக்கி 47 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தின் 7 மாநிலங்களில் 5இல் மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாக்மதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் சில நாட்களுக்கு மழை நீடிப்பதுடன் மண் சரிவுகளும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக காத்மாண்டு விமான நிலையத்தில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சிரமமான நேரத்தில் நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும், தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.