உலகம்

மத்திய சீனாவில் கனமழை: கடும் வெள்ளபாதிப்பு - 21 பேர் மரணம்

Veeramani

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெய்த கனமழையால் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹூபெ மாகாணத்தின் சூக்ஸியான் கவுண்டியில் உள்ள லியுலின் டவுன்ஷிப் பகுதியில் புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மொத்த 503 மிமீ வரை மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் சராசரியாக 3.5 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பேரிடர் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் ஹூபே, அன்ஹுய், ஹுனான், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்றும், குறிப்பிட்ட பகுதிகளில் 200 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தது.  வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண்சரிவு குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கண்காணிப்பு மையம் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், அபாயகரமான பகுதிகளில் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளை நிறுத்தவும் பரிந்துரைத்துள்ளது.

சீனாவில் கடந்த மாதம் ஹெனான் மாகாணம் மற்றும் அதன் மாகாண தலைநகர் ஜெங்ஜோ நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50 பேர் காணாமல் போயினர்.