ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஏழு நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் குயின்ஸ்லாந்து உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அப்பகுதியில் உள்ள அணை மற்றும் ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் விளை நிலங்களுக்குள் நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் சாலைகளில் முதலைகள், பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்க ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 100 ஆண்டுகளில் பெய்யாத இந்த மழைப்பொழிவால், விமான நிலையங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே டவுன்ஸ்வில்லே நகரத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.