உலகம்

ஐரோப்பாவில் தகிக்கும் வெப்ப அலை! ஸ்பெயினில் மட்டும் ஆயிரம் பேர் பலி!

webteam

ஸ்பெயினில் இந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது வெப்ப அலைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,047ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கடந்த 10 நாட்களாக 40 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் தகித்து வருகிறது. வெப்ப அலை தாங்காமல் உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள். 241 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதன் மூலம் அதிக வெப்பத்தால் முதியோர் அதிகளவில் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஒருவாரம் நீடித்த முதலாவது வெப்ப அலையின்போது ஸ்பெயினில் 829 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவாக 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளிலும் தலைநகரான லண்டனிலும் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தாக்கம் காரணமாக, மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகம் வெயில் அடிக்கக்கூடிய சிவப்பு எச்சரிக்கை பகுதிகளுக்கு பயணப்பட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகமும் எச்சரித்துள்ளது. இந்த அளவு அதிக வெயிலை சமாளிக்கும் வகையில், ரயில்கள் இல்லை என்று போக்குவரத்து செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் நீர்நிலைகளையும், நீச்சல் குளங்களையும் நாடிவருகிறார்கள்.

திடீர் வெப்ப மாற்றம் ஏன்?

ஐரொப்பாவில் வெப்ப அலைகளின் அதிகபட்ச தாக்கத்தால் இந்த திடீர் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெப்ப அலைகள் இயற்கையாய் உருவானது அல்ல. இதன் உருவாக்கம் மனிதனால் தூண்டப்பட்டது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். தொழில்மயமாக்கலுக்கு (Industrialization) பிறகுதான் இந்த வெப்ப அலைகள் உருவானதாகவும் இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். வரும் நாட்களில் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை உலக நாடுகள் கணிசமாக குறைக்காவிட்டால் இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் நிலை நிச்சயம் மற்ற நாடுகளிலும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.