உலகம்

அமெரிக்கா: 'இது முதியவரின் சோகம்' - மனம் உருக வைத்த மருத்துவரின் வைரல் புகைப்படம்!

webteam

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரின் கண்ணீருக்கு பதில் சொல்லமுடியாமல் மருத்துவர் ஒருவர் கலங்கிய புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது

கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை இந்த உலகம் உச்சரிக்கத் தொடங்கி ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தொற்றும் முழுவதுமாக விலகிவிடவில்லை. ஆனால் பொதுமக்கள் மாஸ்க், சானிடைசர் என தங்களது அன்றாட வாழ்க்கையை தொடங்கிவிட்டனர். இந்த நேரத்தில் கொரோனாவின் வலியை உணர்த்தும் விதமாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனதை உருக்கும் அந்த புகைப்படமும் அதற்கு பின்னுள்ள கதையும் கொரோனாவின் கொடுமையை விளக்கும் விதமாக உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் ஜோசப் வரோன். டெக்சாஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கிட்டத்தட்ட 252 நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சேவை செய்து வரும் ஜோசப் வரோன், எத்தனையோ நோயாளிகளை பார்த்துவிட்டார். ஆனால் முதியவரின் ஒருவரின் கண்ணீருக்கு பதில் சொல்லமுடியாமல் கலங்கிய புகைப்படம்தான் தற்போது வைரல். இது குறித்து மருத்துவர் ஜோசப் சிஎன்என்க்கு பேசியுள்ளார்.

அதில், நான் மருத்துவமனை ஐசியூவுக்கு சென்றேன். அங்கே ஒரு முதியவர், படுக்கையில் இருந்து இறங்கி அறையைவிட்டு வெளியேற முயற்சித்தார். அவர் அழுதுகொண்டு இருந்தார். நான் அவரின் அருகில் சென்றேன். ஏன் அழுகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், தான் மனைவியிடம் செல்ல வேண்டும். அவர் கையை பற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். நான் மிகவும் துயருற்றேன். அவருக்காக வருத்தப்பட்டேன். நானும் அவரைப்போலத்தான். அவரை நான் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினேன். அவருக்கு ஒரு ஆறுதல் கிடைத்திருக்கும். அவர் அழுகையை நிறுத்தினார்.

நான் ஏன் அவ்வளவு துயருற்றேன் என தெரியவில்லை. எங்களது செவிலியர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். நீங்கள் யோசித்துப்பாருங்கள். நீங்கள் ஒரு அறைக்குள்ளேயே இருக்கிறீர்கள். உங்களை தேடி வரும் மனிதரும் கவச உடை அணிந்து வருபவர் மட்டுமே. எப்படி இருக்கும்? அதுவும் வயதானவர்களுக்கு இன்னமும் மனதை வருந்தச்செய்யும்.

மேலும் அவர்களை தனிமையை உணரச் செய்யும். அதனால் தான் பலர் தப்பித்து ஓடுகின்றனர். ஜன்னல் வழியாக குதிக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கிறது. ஆனால் மக்கள் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை மறந்தும் வெளியுலகில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருக்கக்கூடாது. இல்லையென்றால், ஐசியூ அறைக்குள் அவர்கள் அடைபட நேரிடும். மக்கள் எல்லாம் சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் என்னைப்போன்ற மருத்துவர்களும், செவிலியர்களும் ஓய்வு எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.